அன்புடையீர் வணக்கம்
அவசங்கள், அத்துமீறல்கள், நெருக்கடிகள் நம்மை ஆட்கொள்ள எதேச்சதிகாரம் கோலோச்சும் இக்கட்டான காலமிது. நிகழ்காலக் குழப்பங்கள், நிறைவேறாத அபிலாசைகள் எதிர்காலத்தை இருண்ட பாலையாக நம் முன் வைக்க, வாதைகளைப் பொதிகளாக்கி நித்தமும் சுமந்து அலைகிறோம்.
வழியற்று, கதி கெட்டு, கசந்து நிற்கும் நம் கண்களைத் துடைக்க வல்லவை கலையும் இலக்கியமும்தான் என்றால் அது மிகை இல்லை. அந்தகர்கள், அறிவுக்குருடர்கள் விழிகளில் ஒளி பாய்ச்சி கண் திறப்பதுவும் அதுவே. நசிந்துவிட்ட நிகழ்கால வாழ்மானங்களை ஆற்றுப்படுத்திக்கொள்வதுடன் சக உயிர்களின் மேலான கரிசனத்தையும், அக்கறையையும் அதிகாரங்களுக்கு எதிரான போர்க் குணங்களையும் கலகக்குரல்களையும் நாம் அங்கிருந்து தான் பெற வேண்டியிருக்கிறது.
மேற்சொன்னபடி கலை இலக்கியத் தளங்களில் அருவினையாற்றிய உணர்வாளர்களுக்கு உற்ற மரியாதை செய்யும் முகமாகக் களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மய்யம் கடந்த பதினெட்டு ஆண்டுக் காலங்களாக விழா எடுத்து கௌரவித்து வருகிறது.
அவ்வண்ணமே எதிர் வரும் 10- 01- 2026 சனிக்கிழமை அன்று சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் ஏர்வாடியில் களரி நிகழ்த்தவிருக்கும் மக்கள் கலை இலக்கிய விழாவிற்கு நேரில் வந்து சிறப்பிக்க வேண்டுமாய்ப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவண்
மு. ஹரிகிருஷ்ணன்



